இம்ரான் கான் முதல் ஸ்டோக்ஸ் வரை: ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்ற நட்சத்திரங்கள்!

ESPNcricinfo staff
ஓய்வை அறிவித்துவிட்டு மீண்டும் களத்துக்குத் திரும்புவது என்பது கிரிக்கெட் நட்சத்திரங்களுக்குப் புதிதல்ல.

பென் ஸ்டோக்ஸ் © Getty Images

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்யூ மாட், கேப்டன் ஜாஸ் பட்லர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது முடிவை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். 2019 உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றுவதற்கு பெரும் பங்களித்தவர் ஸ்டோக்ஸ். ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்ற முக்கிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

இம்ரான் கான் © Allsport/Getty Images

இம்ரான் கான்

பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் இம்ரான் கான், 1987 உலகக் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். லாகூரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வில் இருந்து இம்ரான் கான் திரும்பினார். அவர் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1991 உலகக் கோப்பையை வென்றது.

ஷாஹித் அஃப்ரிடி © AFP

ஷாஹித் அஃப்ரிடி

அதிகமுறை ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு உரியவர் பாகிஸ்தான் நட்சத்திர ஆல்ரவுண்டர் அஃப்ரிடி. 2006, 2010, 2011, 2014, 2017 என ஐந்து முறை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார். 2006, 2011, 2016 ஆண்டுகளில் ஓய்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் களத்துக்கு வந்தார். கடந்த கால் நூற்றாண்டு கால வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரரான அஃப்ரிடி, அதிரடியான பேட்டிங் மட்டுமின்றி விதவிதமான சுழற்பந்து வீச்சிலும் விற்பனர்.

ஜவஹல் ஸ்ரீநாத் © Getty Images

ஜவஹல் ஸ்ரீநாத்

2002-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெறுவதாக ஜவஹல் ஸ்ரீநாத் அறிவித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி ஓய்வில் இருந்து மீண்டு வரும்படி ஸ்ரீநாத்தை வலியுறுத்தினார். களத்துக்குத் திரும்ப வந்த ஸ்ரீநாத் மேலும் 3 டெஸ்டுகள் விளையாடினார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சுப் படைக்குத் தலைமை தாங்கினார். கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதிச் சுற்று வரை முன்னேறியது.

கார்ல் ஹூப்பர் © Getty Images

கார்ல் ஹூப்பர்

கிரிக்கெட் உலகின் நளினமான பேட்டர்களில் ஒருவரான ஹூப்பர், 1999-ல் தனது 32வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து சரிவை சந்திக்கவே, 2002-ல் அவர் மீண்டும் அணியில் இணைந்தார். ஓய்வில் இருந்து திரும்பி வந்த ஹூப்பர், நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அணியை வழிநடத்தினார். 2003-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மீண்டும் ஒருமுறை ஓய்வுபெற்றார்.

கெவின் பீட்டர்சன் © AFP

கெவின் பீட்டர்சன்

2012-ல் சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக கெவின் பீட்டர்சன் அறிவித்தார். 2012 டி20 உலகக் கோப்பை நெருங்கும் சமயத்தில் வெளியான இந்த அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியடைய செய்தது. ஆனால் இரு மாதங்களுக்குப் பிறகு, தான் மீண்டும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்புள்ளது என்று பீட்டர்சன் அறிவித்தார். சொன்னபடி இங்கிலாந்து அணிக்குத் திரும்பிய அவர், மேலும் 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார்.

மியாண்டட் © Getty Images

ஜாவேத் மியாண்டட்

1994-ல் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட மியாண்டட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் 'மியாண்டட் இல்லை; கிரிக்கெட் இல்லை' என்று அவருக்காக ஆதரவுக் குரல் எழுப்பினார்கள். அன்றைய பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் தலையீட்டினால் தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றார் மியாண்டட். 1996 உலகக் கோப்பைப் போட்டியில் மீண்டும் பாகிஸ்தான் அணியின் சீருடையை அணிந்தார்.

தமிம் இக்பால் © AFP via Getty Images

தமிம் இக்பால்

கடந்த ஜூலை 5-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேசம் தோல்வியடைந்தது. ஆட்டம் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்தார் தமிம் இக்பால். உலகக் கோப்பை போட்டிக்கு மூன்று மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் தமிம் இக்பாலின் அறிவிப்பு வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் சமாதானத்தை ஏற்று ஓய்வு முடிவைக் கைவிட்டார் தமிம் இக்பால்.

மொயீன் அலி © Getty Images

மொயீன் அலி

2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார். 2023 ஆஷஸ் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயமடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சிவப்புப் பந்தைக் கையில் எடுத்தார் ஆல்ரவுண்டர் மொயீன் அலி. 195 விக்கெட்டுகளுடன் 2021-ல் ஓய்வை அறிவித்த அவர் ஆஷஸ் தொடருக்குப் பிறகு 204 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

Comments