பீட்டர்சன் வழியில் பயணிக்கிறார் ஹாரி புரூக்: கிரிக்கெட் நிபுணர் சில்ட் பெர்ரி புகழாரம்!

ESPNcricinfo staff

ஹாரி புரூக் © Getty Images

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வழியில் பயணிக்கிறார் என்று கிரிக்கெட் நிபுணர் சில்ட் பெர்ரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நடு வரிசை பேட்டர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 91 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

11 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ஹாரி புரூக் 4 சதங்கள் 6 அரை சதங்கள் உடன் 1086 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 64.05, ஸ்டிரைக் ரேட் 91.51. குறைந்தபட்சம் 11 டெஸ்டுகளில் விளையாடி அதிக சராசரி கொண்ட இங்கிலாந்து பேட்டர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் முன்னாள் வீரர் ஹெர்பெர்ட் சட்கிளிஃப் உள்ளார். அதே போல, சர்வதேச அளவில் 11 டெஸ்டுகளில் விரைவாக ரன் குவித்தவர் என்ற சிறப்பையும் புரூக் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஹாரி புரூக்கின் பேட்டிங் 2005 ஆஷஸ் தொடரில் விளையாடிய பீட்டர்சன் பாணியில் உள்ளது என்று கிரிக்கெட் நிபுணர் சில்ட் பெர்ரி புகழாரம் சூட்டியுள்ளார். டெலகிராஃப் இதழில் எழுதிய பத்தியில், "2003-ம் ஆண்டில் இங்கிலாந்தில் தான் டி 20 கிரிக்கெட் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தப் பலனை இப்போது இங்கிலாந்து அணி முழுமையாக அனுபவித்து வருகிறது. ஹாரி புரூக்கால் எல்லாப் பந்துகளிலும் சரளமாக ரன் குவிக்க முடியும்." என்றார்.

ஷார்ட் ஆஃப் எ லெங்த் பந்துகளை எதிர்கொண்டு விளையாடுவதில் புரூக் வல்லவர் என்ற சில்ட் பெர்ரி, "புரூக்கை கடந்த கால இங்கிலாந்து பேட்டர்களுடன் ஒப்பிட வேண்டுமென்றால் அவரை பீட்ட்ர்சனுடன் மட்டும்தான் ஒப்பிட முடியும். பீட்டர்சனை விட புரூக் சற்று உயரம் குறைவானவர். ஆனால் அவரை விட நெகிழ்வான உடல்வாகு கொண்டவர். 2005 ஆஷஸ் தொடரில் பீட்டர்சன் விளையாடியதைப் போல புரூக் விளையாடுகிறார். சதம் மட்டும்தான் இன்னும் பாக்கி." என்றார்.

நடப்பு ஆஷஸ் தொடரில் ஹாரி புரூக் 8 இன்னிங்ஸ்களில் 2 அரை சதங்களுடன் 356 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.40, ஸ்டிரைக் ரேட் 78.24.

2005 ஆஷஸ் தொடரில் கெவின் பீட்டர்சன் 10 இன்னிங்ஸ்களில் 1 சதம் 3 அரை சதங்களுடன் 473 ரன்கள் குவித்தார். சராசரி 52.55.

Comments